ஜீ-5 ஓடிடி தளம், அதிரடியான தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தயாரித்து நேரடியாக தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் புதிதாக உருவாகி இருக்கிறது விலங்கு இணைய தொடர்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
தொடரில் நாயகனாக விமல் நடித்துள்ளார். தவிர இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர். மனோகர், ரேஷ்மா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடித்துள்ளனர்.
அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – தினேஷ் குமார் புருஷோத்தமன்.
7 பாகங்களை கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது.
‘விலங்கு’ ஜீ-5 ஒரிஜினல் இணைய தொடர், நாளை – பிப்ரவரி 18-ம் தேதி- வெளியாகிறது. இதையொட்டி இந்தத் தொடரில் பணியாற்றிய குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். இந்தக் கதையை முதலில் கேட்டபோது திரைப்படமாக உருவாக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் கதையை சொல்ல சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் இது புதிய அனுபவம்.
நான் ஹீரோதான். ஆனால், படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன். தயாரிப்பாளர் அண்ணன் மதனும் பிஸியாக இருந்தவர்தான். ஆனால் அவரும் படம் இல்லாமல் இருந்தார். ஒரு தோல்வி படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரசாந்த்.
நாங்கள் மூவரும் இணைந்து எங்களது அனுபவத்தை பயன்படுத்தி இந்தத் தொடரை உருவாக்கி உள்ளோம். எங்களை நம்பி ஜீ-5 இதை முன்னெடுத்துள்ளார்கள். நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டோம்.
இந்தத் தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமேல் நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக இந்த ‘விலங்கு’ இணையத் தொடர் இருக்கும்..” என்றார்.