பெங்களூரு: ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’  மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான  40 இடங்களில் வருமான வரித்துறை நேற்றுமுதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா காலக்கட்டமான கடந்த இரு ஆண்டுகளில் அமோகமாக விற்பனையான மாத்திரை ‘டோலோ-650’  என்பது அனைவரும் அறிந்ததே. டோலோ மாத்திரை விற்பனை அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. கோவிட் உச்சக்கட்டத்தின் போது, ​​டோலோ-650  இந்தியாவின் விருப்பமான சிற்றுண்டி என்று அழைக்கப்பட்டது.

இந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ தலைமையகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த  நிறுவனம், ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறியுள்ள  வருமான வரித்துறையினர்,  மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் மைக்ரோ லேப்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் திலீப் சுரானா மற்றும் இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் ஐடி துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழு சோதனை நடத்தியது.

மேலும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான டெல்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில்  200 அதிகாரிகள் ஒரே நேரத்தில்  சோதனை நடத்தியதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாதவநகர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.