சென்னை: காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்தது ஏன்? என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
100ஆண்டு காலம் பெருமைகொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும், கட்சியை பலப்படுத்தவும், தேர்தல் வியூக வகுப்பாளரன பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.  தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதனால் அவர் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. கட்சியின் தற்போதைய தலைவரான சோனியா காந்தியை அவர் சந்தித்து பேசியது தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய கட்சி தலைமை விடுத்த கோரிக்கையை  மறுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரசாந்த் கிஷோர்,   காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும்  காங்கிரஸ் கட்சி வழங்கிய தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன். எனது தாழ்மையான கருத்து என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே முக்கியம்.  என்னை விட கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர், அவர்களை கலந்தாலோசித்து,  கட்சிக்கு தலைமை மற்றும் கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அடிப்படை கட்டமைப்பிற்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,  மத்திய அரசோடு மோதல் போக்கை கையாண்டு வரும் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தாண்டு தெலுங்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனக்கு உதவுவார் என சந்திரசேகரராவ் கூறிய நிலையில், முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.