புதுச்சேரி: நான் வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; பிழை செய்ய மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, மாநில  பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு தள்ளாட்டத்தில் உள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை 22ந்தேதி மாலைக்குள் நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், 3 நியமன எம்எல்ஏக்களை, பாரதியஜனதா எம்எல்ஏக்கள் என குறிப்பிட்டிருந்தை, வரலாற்று பிழை என முதல்வர் நாராயணசாமி விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், நாராயணசாமிக்கு பொறுப்பு ஆளுநர் தமிழிசை பதில் கூறி உள்ளார். தான் ஒருபோதும் பிழை செய்ய மாட்டேன்; வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் ஆளும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு, சுயேச்சை எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. எதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.வுக்கு 3 நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதுவை சட்டசபையில் ஒரே எண்ணிக்கையிலான சமபலம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு 14-வது சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  சட்டசபையில் இடம் பெற்றுள்ள 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை கிடையாது என ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சர்சையாகி உள்ளது. இருந்தாலும்,  , சட்ட சபையை பொறுத்த வரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்பதால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில்,    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.