டில்லி

சிஐசிஐ வங்கியின் விசாரணை ஆணைய அறிக்கையால் தாம் மனம் உடைந்துள்ளதாக வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சர் தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகோன் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி தராததை ஒட்டி சிபிஐ விசாரணை செய்தது. அப்போது வங்கியின் அப்போதைய நிர்வாக தலைவர் சந்தா கோச்சரின் கணவுக்கு வீடியோகோன் துணை நிறுவனத்தின் பங்கௌகல் லஞ்சமாக வழங்கப்பட்டதாக அறியப்பட்டது. அதை ஒட்டி வங்கி தரப்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளார். அத்துடன் வங்கியின் பொருளாதார நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர் வங்கியின் பொருளாதார நலனுக்காக ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து தவறி உள்ளார். அத்துடன் கடனை திரும்பப் பெற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

இவருடைய நடவடிக்கைகளால் வங்கியின் செயல்பாட்டுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தா கோச்சார் ராஜினாமா செய்தது என்பது கிட்டத்தட்ட அவரை பதவி நீக்கம் செய்ததற்கு சமமாகும். எனவே கடந்த ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2018 வரை அவருக்கு அளிக்கபட்ட போனஸ் தொகைகளை வங்கி திரும்பப் பெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தா கோச்சர் ஐசிஐசிஐ வங்கியில் சுமார் 34 ஆண்டுகளாக பணிபுரிபவர் ஆவார். அவர் இந்த விசாரணை அறிக்கையை கடுமையாக மறுத்துள்ளார். அந்த விசாரணை ஆணய முடிவு அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை சந்தா கோச்சர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சந்தா கோச்சர், “வங்கியின் கடன் முடிவுகளை நான் எப்போதும் மாற்றவில்லை. கடனைத் திரும்பப் பெற வங்கியில் ஏற்கனவே நடைமுறைகள் உள்ளன

அந்த நடைமுறைகளை நான் எப்போதும் மாற்றியதில்லை. நான் கடந்த 34 வருடங்களாக ஐசிஐசிஐ வங்கியில் கடுமையாகவும் பொறுப்புடனும் பணி ஆற்றி உள்ளேன். நான் வங்கிக்கு எதிரான எந்த ஒரு முடிவையும் எடுத்தது கிடையாது. வங்கியின் விசாரணை அறிக்கை எனக்கு மன வேதனையை அளிக்கிறது.

நான் எனது பணியை நியாயமாக செய்துள்ளேன். எனது நடத்தை தவறானது அல்ல என்பதில் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அத்துடன் நான் இனியும் நியாயமாகவும் கண்ணியத்துடனும் நடந்துக் கொள்வேன். விரைவில் உண்மை வெளிவரும் என்னும் நம்பிக்கையும் எனக்கு உண்டு.” என தெரிவித்துளார்.