நடிகர் விஜய் தனது படத்தில் அவ்வப்போது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராக பஞ்ச் டயலாக் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிகில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய், அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் எனவும் விஜய் சூசகமாக கூறினார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இது எனது முயற்சி என விஜயின் தந்தை தனியார் ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தான் பதிவு செய்துள்ளது, விஜய்யின் அரசியல் கட்சி அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளவர், விஜய் தேர்தல் மற்றும் அரசியலில் நுழைவாரா என்று என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி பதிவு என வெளியான செய்தி தவறு என அவரது பிஆர்ஓ மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.