காபூல்

தாலிபான்கள் வந்து தம்மைக் கொல்ல தாம் காத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நாட்டில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.  ஏற்கனவே தாலிபான்கள் ஆட்சியில் ஷரியத் சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் முன்னேற்றம் அடியோடு தடைப்பட்டது.  மேலும் தண்டனைகளும் கடுமையாக இருந்தன.  தற்போது மீண்டும் அதே நிலை ஏற்படலாம் என மக்கள் பயந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி என்பவர் ஆவார்.  தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால் இவருடைய நிலை மிகவும் அச்சத்துக்குள்ளாகி இருக்கிறது.   சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு கூட சரிஃபா தாலிபான்களால் நாட்டை பிடிக்க முடியாது என்னும் நம்பிக்கையுடன் இருந்தார்.

அவர் தற்போது, “இஸ்லாமியத் தீவிரவாதிகளான தாலிபான்கள் வரவேண்டும் எனக் காத்துக்கொண்டு இருக்கிறேன்.  நானும் என் கணவரும் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்.  அவர்கள் என்னைப் போன்றோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வருகின்றனர்.  நான் அதற்கு அஞ்சவில்லை.  என்னைக் கொல்ல அவர்கள் வருவதை எதிர்நோக்கி உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.

தற்போது 27 வயதாகும் கஃபாரி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மற்றும் வயதில் மிகவும் இளைய மேயர் ஆகப் பதவி ஏற்றார்.  அவருக்கு ஏற்கனவே தாலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்தனர்.  அவர் இஸ்லாமியச் சட்டங்களை மீறி பதவிக்கு வந்துள்ளதாக அவர்கள் குறை கூறி உள்ளனர். சரிஃபாவின் தந்தை கடந்த வருடம் நவம்பர் 15 ஆம் தேதி சுட்டுக கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.