சென்னை: வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் (கொடுக்கவும்) தயாராகவே இருக்கிறேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி (எஸ். எஸ். ராமசாமி படையாட்சி என்பவர், தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1951 இல் வன்னிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றவர். இவரது 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளையொட்டி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை மீட்டே தீருவேன் அதற்காக எனது உயிரையும் கொடுக்க தயார் என்று வன்னியர் சங்க தலைவரும், பாமக தலைவருமான மருத்துவர் ராமதாஸ் கூறியாளார்.
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தி.மு.க. அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் நாடகங்களை மட்டுமே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் , தனது கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு, நாளையுடன் 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது.
சமூகநீதி என்ற பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு தி.மு.க. அரசு காட்சியளித்தாலும், அது சமூக அநீதி என்ற புலிதான் என்பதை வன்னியர்களுக்கு இழைத்து வரும் துரோகத்தின் மூலம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதிய பயன் கிடைக்கவில்லை என்று 31 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நாம், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி கடந்த 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய சமூக நீதி போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் பயனாகவே முந்தைய ஆட்சியில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று ஐகோர்ட்டு ஆணையிட்ட நிலையில், அதை எதிர்த்து நாம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம்நாள் தீர்ப்பளித்தது. அதன்பின் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
தமிழக அரசு நினைத்தால் இரண்டரை மாதங்களில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தி.மு.க. அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் நாடகங்களை மட்டுமே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில், அதற்கு அடுத்த வாரமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், 7 மாதங்கள் கழித்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையே மாற்றி அமைத்தது. அப்போதும் கூட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மாறாக, 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டது.
வன்னியர் இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 20 மாதங்களாகியும் எதுவும் செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பாக செயல்பட வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தி.மு.க. அரசின் சமூக அநீதி கூட்டாளியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அநீதி சக்திகளையெல்லாம் எதிர்த்து தான் நாம் நமது சமூகநீதி போராட்டத்தை நடத்திச் செல்ல வேண்டியுள்ளது.
நிறைவாக, பாட்டாளி சொந்தங்களுக்கு நான் ஒரு உறுதிமொழியை அளிக்க விரும்புகிறேன்…. வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க போராட்டம் தான் ஒரே தீர்வு என்றால், அதற்காக உங்களுடன் இணைந்து களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன்.
உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈந்தால்தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.
எப்படியிருந்தாலும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்காமல் இந்த ராமதாஸ் ஓய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.