பெங்களூரு: எனது காயம் குறித்து பிறர் பேசுவது பற்றியெல்லாம் கவலையில்லை; காயம் முழுமையாக குணமடைந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டுமென்பது மட்டுமே எனது எண்ணம் என்று தெரிவித்துள்ளார் ரோகித் ஷர்மா.

தற்போது, பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபடும் அவர் கூறியுள்ளதாவது, “எனது காயம் குறித்து பலரும் பலவிதமாகப் பேசுகின்றனர். ஆனால், அதுபற்றி நான் கவலைப்படுவதில்லை.

பிசிசிஐ மற்றும் மும்பை அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து வந்தேன். டி-20 போட்டியில், சமாளிக்க முடிந்த காரணத்தால் பங்கேற்றேன். அதேசமயம், ஆஸ்திரேலிய தொடரில், ஒருநாள் & டி20 போட்டி வகைகளில்,  11 நாட்களில் 6 போட்டிகள் நடைபெறுகின்றன.

எனவே, இவற்றில் பங்கேற்றால், டெஸ்ட் போட்டியின்போது சிக்கல் ஏற்படலாம். எனவேதான், ஆஸ்திரேலியா செல்லாமல் பெங்களூரு வந்தேன். தொடைப்பகுதி காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வருவதை உணர்கிறேன். இன்னும் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது.

எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தெளிவான மனநிலையில், டெஸ்ட் தொடரில் களம் காண்பேன். வேறு எதைப் பற்றியும் கவலையில்லை” என்றுள்ளார் அவர்.