சென்னை : வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நமது திராவிடன் மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த ‘அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால’த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜிடி நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோவை அவினாசி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், அதற்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. அதன்படி,. உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 17.25 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது. இது 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப்பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தொடங்கியது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், மேம்பாலப் பணிகள் தொடர்ந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்து, நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட மேபாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை வரை 305 தாங்கு தூண்களுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் ஆகிய இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரெசிடென்சி ஓட்டல் அருகே மட்டும் ஏறுதளம் அமைக்கப்பட்டுள்ளது.