டில்லி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் எனவும் தாம் இல்லை எனவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடரை 2:1 என்னும் கணக்கில் வென்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதில் பிரிஸ்பேனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களின் அபார விளையாட்டால் இந்தியா வெற்றி அடைந்தது. டிதில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் எனப் பலரும் அசத்தலாக ஆடினார்கள்.
இந்திய அணியின் இளம் வீரர்களுக்குக் கடந்த 2016 முதல் 2019 வரை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார். இவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய ஏ அணிக்குத் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம் எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இதற்கு ராகுல் டிராவிட, தன்னடக்கத்துடன் மறுப்பு தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட், “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றிக்காக எனக்குத் தேவையற்ற பாராட்டுகள் அளிக்கப்படுகிறது. இந்த பாராட்டுக்கள் அனைத்துக்கும் இளைய வீரர்கள் மட்டுமே காரணம் ஆவார்கள். நான் தேவையில்லாத பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.