டில்லி

தேர்தல் பிரசாரத்தின் போது தம்மை டில்லியின் மகள் என பிரியங்கா கூறி பெருமை அடைந்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மே 12 ஆம் தேதி டில்லியில் வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன.   இங்கு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் களத்தில் உள்ளன.   காங்கிரஸ் கட்சிக்காக டில்லி முழுவதும் அக்கட்சியின் செயலர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார்.   அவ்வகையில் அவர் நேற்று டில்லியில் சாலைப் பேரணியில் கலந்துக் கொண்டார்.

அப்போது பிரியங்கா, “மோடி தவறான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.   தற்போதைய தேர்தலில் அவர் தனது பொய் வாக்குறுதிகளுக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்.   கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி என்ன செய்துள்ளார்?  கருப்புப்பணத்தை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து மக்களை வரிசையில் நிற்க வைத்தார்.   கருப்புப் பணம் வரவில்லை.

ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதாக இளைஞர்கலிடம் பொய் வாக்குறுதி அளித்தார்.  ஆனால் எத்தனை வேலை வாய்ப்புக்களை அவர் உருவாக்கினார்?  இதற்கு யார் பொறுப்பு?  இது போல அவர் அளித்த பல பொய் வாக்குறுதிகளே இப்போது அவருக்கு எதிராக உள்ளன.

நான் டில்லியின் மகள்.  இங்கு பிறந்த பெண்.  இந்நகரத்தின் ஒவ்வொரு மூலையும் எனக்குத் தெரியும்.   இங்கு 47 வருடமாக வசித்து வருகிறேன்   ஆனால் மோடி எங்கிருந்தோ வந்தவர்.   அவருடைய இல்லமான  நம்பர் 7, லோக் கல்யாண் மார்க் ஐ விட்டு வெளியே வந்ததே கிடையாது.   அவருக்கு டில்லியை பற்றி என்ன தெரியும்?

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் ஆசிரியர்களிடம் பொய் சாக்கு கூறுவதை போல் மோடி காரணம் தெரிவிக்கிறார்.  அவர், ‘ நான் என்ன செய்ய? நேருஜி என்னுடைய வீட்டுப்பாட நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்து விட்டார்.   இந்திராஜி அதில் உள்ள காகிததை கிழித்து கப்பல் செய்து விட்டார்’ என்பதை போல் சாக்கு சொல்லி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.