
டில்லி,
அரசியல் காரணங்களுக்காக நான் பழி வாங்கப்பட்டேன், தொழிலதிபர் மல்லையா போல் அடுத்தவர் பணத்தை எடுத்து கொண்டு நான் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா காட்டமாக கூறி உள்ளார்.
லண்டனில் வசித்து வரும் மல்லையாமீது ஏராளமான பண மோசடி புகார் உள்ளது. இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க கோரும் மனுமீதான விசாரணை லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் நேற்று ஆஜரான மல்லையா, நான், ராபர்ட் வதேரா, இமாச்சல முதல்வர் வீரபத்ர சிங் போல் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் என கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, மல்லையாவின் வாதத்தக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அதில், சொந்த நலனுக்காக சிலர் கூறிய கருத்து காரணமாக, எனது பெயர் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது என்றார்.
இங்கிலாந்து கோர்ட்டில் மல்லையா எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். நான் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் என்பது உண்மைதான். ஆனால் நான் முறைகேடு செய்ததில்லை. நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை போல் மற்றவர் பணத்தை எடுத்து கொண்டு நாட்டை விட்டு தப்பி செல்ல வில்லை.
மல்லையா நாடு திரும்பி, அனைத்து வழக்குகளையும் சந்திக்க வேண்டும். மக்களுக்கு சொந்தமான பணத்தை திருப்பி தர வேண்டும் என கூறினார்.
மேலும், எக்காரணம் கொண்டும் எனது பெயரை மல்லையா பயன்படுத்த வேண்டாம் என்றும், அவருடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]