பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தைக் கொலை செய்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறினார்.

 

பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை நீக்கவே இந்த நடவடிக்கை என்று குற்றம் சாட்டி வருகின்றன.

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது. அதற்கான ஆதாரங்களை கொடுக்கும்படி கூறி வருகிறது. ஆனால், ராகுல் தரப்பில், நீக்கப்படுபவர்கள் யார் யார் என்ற ஆதாரங்களை தேர்தல் ஆணையம் தர வேண்டும் என கூறி வருகிறார். அத்துடன் விரைவில், இதுதொடர்பான   ஹைட்ரஜன் குண்டு வீசப் போவதாக பேசி வருகிறார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,   இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,  கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததைப் பற்றி சான்றுகளுடன் குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார்.

. ‘தி ஆலந்து பைல்ஸ்’ என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் தரவுகளுடன் பேசிய ராகுல்,  ”இன்று வெளியிட இருப்பது ஹைட்ரஜன் குண்டு கிடையாது. விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெளியிடப்படும். நாட்டின் இளைஞர்களுக்கு தேர்தல்களில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை காட்டும் மற்றொரு மைல்கல் இது. இந்திய ஜனநாயகத்தை அழித்த மக்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டியதுடன்,   ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

இது,  எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர், ஓபிசி உள்பட சில சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்படு கிறது. தற்போது 100 சதவிகித ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றவர்,  கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க யாரோ முயற்சித்துள்ளனர். அவர்கள் தற்செயலாக பிடிபட்டுள்ளனர் என்றார்.

2023 தேர்தலில் ஆலந்து தொகுதியில் நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் வாக்காளர்கள் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால், 6,018-ஐ விட அதிகம். ஆலந்து சட்டப்பேரவைக்கு உட்பட்ட வாக்குச் சாவடி அதிகாரி ஒருவரது உறவினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விசாரித்ததில், பக்கத்து வீட்டுக்காரர் நீக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது, அவர் எந்த வாக்காளரின் பெயரையும் நீக்கச் சொல்ல வில்லை எனத் தெரிவித்தார்.

வாக்காளருக்கோ வாக்காளரை நீக்கச் சொன்னவருக்கோ தெரியாமல், யாரோ ஒருவர் இதனைச் செய்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்வதற்காக தானியங்கிச் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6,018 விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாக்குச் சாவடிகளைக் குறிவைத்து, காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் அவருக்கே தெரியாமல் போலி உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்பட்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிக்கப்பட்டது.

கோதாபாய் உள்நுழைவுகளை பயன்படுத்தி, வெளிமாநிலத்தைச் சேர்ந்த வெவ்வேறு மொபைல் எண்கள் மூலம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சூர்யகாந்த் என்ற வாக்காளரின் உள்நுழைவை பயன்படுத்தி 14 நிமிடங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வாக்காளர்களின் பெயர் நீக்க விண்ணப்பிக் கப்பட்டுள்ளது. நாகராஜ் என்பவரின் உள்நுழைவுகளைப் பயன்படுத்தி, 36 நொடிகளில் இரண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது மனிதரால் செய்ய சாத்தியமற்ற ஒன்று. வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தானியங்கி செயலிகள் மூலம் செய்யப்படு கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உள்ள முதல் வாக்காளரை தேர்ந்தெடுத்து, நீக்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது கால் சென்டர் மூலம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில்காங்கிரஸ் பலமாக இருக்கும் வாக்குச் சாவடிகள் குறிவைக்கப்பட்டு இந்த முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியவர்,  காங்கிரஸ் பலமாக இருந்த 10 வாக்குச் சாவடிகளில் அதிகளவிலான வாக்காளர் பெயர் நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது என்றார்.

இந்த தொகுதியில்,  கடந்த 2018 தேர்தலில் 10 வாக்குச் சாவடிகளில்  -ல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது என்பதை சுட்டிக்காட்டியவர்,  மகாராஷ்டிரத்தின் ராஜூரா தொகுதியில் 6,815 வாக்காளர்கள் குறிவைக்கப்பட்டனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உ.பி. ஆகிய இடங்களில் இதைச் செய்வது ஒரே அமைப்புதான். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக பொதுமக்களிடையே பேசிய ராகுல்,   பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன. இது பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியே இது. அந்த வாக்குத் திருடா் இப்போது பிகாருக்கு வந்துள்ளாா். ஆனால், தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை.

இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமா் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், பிகாா் மக்களின் வாக்குகளைத் மத்திய அரசு திருட எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டு முயற்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது. இளைஞா்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு முடக்கி வருகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா்.