டெல்லி:

ஐதராபாத் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புகர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதி மன்றம் நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தும் எனவும், இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் வேறு நீதிமன்றமோ, அமைப்போ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்மருத்துவர் பிரியங்கா ரெட்டி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த கொடூர  சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய, லாரி டிரைவர்களான  முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடந்த  பின்னர் கடந்த 6ம் தேதி  காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் இந்த அதிரடிக்கு  பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சில மனித உரிமை ஆர்வலர்களின்  எதிர்ப்பு காரணமாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.