ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு, CBSE மற்றும் ICSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அதில் தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, பள்ளி வளாகத்தில் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் பள்ளிகள் அதை லாப நோக்கில் வணிக ரீதியாக இல்லாமல் தங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையில் விற்பனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரியின் இந்த உத்தரவை அடுத்து மண்டல அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைக்க துணைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.