ஐதராபாத்,
ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), என்ற இஸ்லாமியர், திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் தலாக் என எழுதி கடிதத்தை அனுப்பியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இந்தியாவில் தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் வேளையில் மீண்டும் இதுபோல கடிதம் மூலம் தலாக் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த ஹனீப் என்பவர் தபால் அட்டையில் மூன்றுமுறை (முத்தலாக்) தலாக் என்று எழுதி தனது மனைவிக்கு அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ஹனீப் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும் தலப்கட்டா பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மார்ச் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு அடுத்தநாள் வீட்டைவிட்டு வெளியேறிய ஹனீப், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் சில நாட்கள் வீட்டிற்கு வரமாட்டேன் என மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து மார்ச் 16-ம் தேதி தனது மனைவியின் வீட்டு முகவரிக்கு அஞ்சல் அட்டையில் ஹனீப் மூன்று முறை தலாக் என எழுதி அனுப்பியுள்ளார்.
இரண்டு பேர் சாட்சியாக தான் தலாக் செய்வதாகவும் அந்த அஞ்சல் அட்டையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவிக்கு தலாக் குறித்து போனிலும் ஹனீப் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹனீப்பின் மனைவி தனது பெற்றோருடன் சென்று, தலப்கட்டா காவல் நிலையத்தில் ஹனீப்பிற்கு எதிராக புகார் கொடுத்தார்.
புகாரைத் தொடர்ந்து ஹனீப்பிற்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், இதுதொடர்பாக நேற்று அவரைக் கைது செய்தனர்.
முகம்மது ஹனீப் அவரது மனைவி இருவருக்கும் இது 2-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஹனீஃப், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
“திருமண நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. அவர் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை” என்று துணை போலீஸ் ஆணையர் வி. சத்யநாராயணா தெரிவித்தார்.
“முதலில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். அதன்பிறகு, எங்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைப்படி, அவரை பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்வோம்” என்றார் போலீஸ் அதிகாரி.
இஸ்லாமிய சட்டப்படி, ஒரு நபர் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் தலாக் சொல்லி விவாக ரத்து செய்யும் நடைமுறையை தடை செய்துவிட்டன. இந்தியாவிலும் தடை செய்ய கோரி ஒரு சாரார் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.