ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், உலகின் மிகச்சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியாவின் ஒரே விமான நிலையம் இதுதான்.
நேரம் தவறாத சேவை, சேவையின் தரம், உணவு மற்றும் பொருட்களை வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு விமான நிலையத்திற்கு தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.
இதில் முதல் அம்சத்திற்கு 60% மதிப்பெண்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அம்சங்களுக்கு தலா 20% மதிப்பெண்களும் வழங்கப்படும்.
இந்தவகையில், உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் வரிசையில்,
கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தையும், ஜப்பானின் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் இரண்டாமிடத்தையும், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையம் மூன்றாமிடத்தையும் பெறுகின்றன.
இந்தியாவின் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், இப்பட்டியலில் 8ம் இடத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் என்று பட்டியலிடப்பட்ட விமான நிலையங்களுள், லண்டன் காட்விக் விமான நிலையம் முதலிடத்திலும், கனடாவின் பில்லி பிஷப் டொராண்டோ சிட்டி விமான நிலையம் இரண்டாமிடத்திலும் வருகின்றன.