சவுதி அரேபியாவின் ரியாத் மெட்ரோ ரயிலை ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் லோகோ பைலட் இயக்க உள்ளார்.
33 வயதான இந்திரா இகல்பதி, ரியாத்தில் ரயில் பைலட்டாகவும், ஸ்டேஷன் ஆபரேஷன் மாஸ்டராகவும் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துலிபல்லாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திரா இகல்பதி 2006ம் ஆண்டு முதல் ஹைதராபாத் நகரில் வசித்து வந்த நிலையில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தார்.
சவுதி அரேபியாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரியாத் மெட்ரோவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த 2019ம் ஆண்டு அங்கு சென்றார்.
தற்போது, ரியாத் மெட்ரோவின் சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன மற்றும் ரியாத்தின் விரைவான போக்குவரத்து அமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.
2025-ம் ஆண்டு இந்த ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் ரியாத் மெட்ரோ ரயிலில் லோகோ பைலட்டாக இந்திரா இகல்பதி தனது பணியை தொடங்க உள்ளார்.
பொறியியல் பட்டதாரியான இந்திரா இகல்பதி இதுகுறித்து கூறுகையில், “உலகத் தரம் வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையான தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.