சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் கைது எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்திரதீப் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணைக்கு பிறகு அவர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலீல் சந்த். அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல்குமார் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 11-ம்தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் ஊடுருவிட்டதாக கூறப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்தடி கொலை நடைபெற்றதும், ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ், இவர்களது நண்பர்கள் ரபிந்தரநாத் கர், விஜய் உத்தம், ராஜு ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே, ஆகிய 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 2 கார்கள், 1 இருசக்கர வாகனம், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயமாலாவின் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் தோங்க் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கு சந்திரதீப் சர்மா என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்திரதீப் சர்மா கைலாஷுக்கு பழக்கமானவர் என்று கள்ளத்துப்பாக்கி சப்ளை செய்பவர் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக சவுகார்பேட்டை கொலை வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்நதுள்ளது.