பெங்களூரு:
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் கொரோனாவை விட ‘பசி’ மேலும் அதிக உயிர்களை கொல்லும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் தமிழகத்தில் சென்னை உள்பட மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறையாததால், ஊரடங்கை 3வது கட்டமாக மேலும் நீட்டிக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் கேரளா, கர்நாடக உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வு வேண்டும் என வலி யுறுத்தி வருகின்றன. ஆனால் மத்தியஅரசு இதுவரை எந்தவித அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்து உள்ளார்.
ஊரடங்கு மேலும் தொடர்ந்தால் பசி கொரோனாவை விட அதிகமானவர்களைக் கொல்லக்கூடும் என்று அச்சம் தெரிவித்து உள்ளார். லாக்டவுன் நீண்ட காலமாக தொடர்ந்தால், அமைப்புசாரா துறையில் உள்ள பல நபர்கள் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்தவர், தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களைக் கவனித்துக்கொள்வதோடு, உடல் திறன் உடையவர்களை வேலைக்குத் திரும்புவதற்கு நாடு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் இறப்பு விகிதம் பல வளர்ந்த நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்று மூர்த்தி குறிப்பிட்டவர், பெரும்பாலானவர்கள் தங்கள் வருவாயில் 15-20 சதவீதத்தை இழந்துள்ளனர் என்றார். இது வருமான வரி மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இந்த விஷயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு கட்டத்தில், பசி காரணமாக ஏற்படும் மரணங்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் மரணங்களை விட அதிகமாக இருக்கும்” என்றும் தொழில் முனைவோர் புதுமைகளை அதிகரிக்கவும், கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.