டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதிதாக நீதிமன்றத்தில் காமெடி என்ற பகுதியை இணைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற வாட்ஸப், இ மியூசியம் மற்றும் நீதிமன்றத்தில் நகைச்சுவை ஆகியவற்றின் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய IT, AI மற்றும் அணுகல் குழுவின் தலைவரான நீதிபதி ராஜிவ் ஷக்தேர் நீதிமன்றத்தில் நகைச்சுவை என்ற புதிய பகுதியை இணையதளத்தில் இணைக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இல்லாமல் அதே நேரத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடும் படியாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரருடன் ஏற்பட்ட நகைச்சுவையான சம்பவங்களை தங்கள் குழுவுக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் அதனை இணையதளத்தில் பதிவேற்ற இருப்பதாகத் தெரிவித்தார்.
சில நேரங்களில், கோபத்தைக் குறைக்க, நீதிபதிகள் வேடிக்கையான கருத்தைச் சொல்லலாம். நாம் எப்பொழுதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நமக்கு நாமே சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
நீதிமன்ற நகைச்சுவையை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அல்லது நீதித்துறை நிறுவனம் முயல்வது இது முதல் முறை அல்ல.
ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஞானேந்திர குமாரின் சட்டம் மற்றும் சிரிப்பு பற்றிய ஆவணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.