குவைத்தில் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த தொழிலாளிக்கு, கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் பண உதவி செய்ததால், தற்போது அவர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பித்து உள்ளார்.
மதத்தை ஒதுக்கிவிட்டு மனிதநேயமுடன் பண உதவி அளித்து காப்பாற்றிய இஸ்லாமியர்களுக்கு இந்து தொழிலாளியின் குடும்பம் நன்றி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ஆதிமுத்து. இவர் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் காண்டிராக் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதுபோல, கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஜீத். இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் அப்துல் வாஜித்தை ஆதிமுத்து கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் ஆதிமுத்துவுக்கு குவைத் நீதி மன்றம் மரண தண்டனை வழங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிமுத்து குடும்பத் தினர் வருத்தமடைந்தனர். ஆதிமுத்துவை மரணத்தில் இருந்து காப்பாற்ற அவரது மனைவி முயற்சி மேற்கொண்டார்.
குவைத் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர், கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கினால், குற்றவாளி தண்டனையில் இருந்து விடுவிக்கப்படலாம்.
இதுகுறித்து கேள்விப்பட்ட, அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தனது 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்று அப்துல் வாஜீத் குடும்பத்தினரை சந்திக்க முற்பட்டார். தனக்கு பெண் பிள்ளை இருப்பதாகவும், ஏழ்மையில் வாடுவதாகவும், தனது கணவரை காப்பாற்றும்படியும், அவர் செய்த குற்றத்திற்காக எங்களை மன்னிப்பு வழங்கி எங்கள் குடும்பத்தை வாழ வையுங்கள் அவர்களிடம் மன்றாடினார்.
இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு தெரிய வந்தது. அவர்கள் வாஜித் குடுத்பத்தினருடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, ஆதிமுத்துவுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும், அதற்கு பிரதிபலனாக, ஏழ்மையில் வாடும் தனது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாய் பண உதவி வழங்கும்படியும் கோரப்பட்டது.
ஆனால், அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன் என்று புலம்பிய மாலதி,த னது சொத்து மற்றும் நகைகளை விற்று 5 லட்சம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்தது. மேலும் பணத்துக்காக அங்குள்ளவர்கள் கொடுத்த தகவலின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடுஹைதர் அலி ஷிகாப்தங்கலை சந்தித்து உதவிசெய்யும் கோரினார். உதவியை நாடினார்.
இரு குடும்பங்களின் வாழ்வாதாரங்கங்களை கண்ட முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த நண்பர்கள், மற்றும் இஸ்லாமிய அறக்கட்டளைகளின் உதவியை நாடினார்.
இதன் வாயிலாக ரூ. 25 லட்ச ரூபாய் திரண்டது. அத்துடன் மாலதி ஆதிமுத்து கொடுத்த 5 லட்ச ரூபாயோடு சேர்த்து, ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜித்தின் குடும்பத்தினருக்கு கொடுத்து, அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் வாங்கப்பட்டது.
அதையடுத்து, அந்த மன்னிப்பு கடிதம், இந்தியத் தூதரகத்தின் மூலம் குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அர்ஜுனன் ஆதிமுத்துவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
முகம் தெரியாத ஒரு இந்து இளைஞனின் உயிரை காப்பாற்ற, இஸ்லாமியர்கள் செய்த பண உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவரின் உயிர் காப்பாற்றப்பட்டதே பெரும் மகிழ்ச்சி என்று மாலதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கூறிய முனவரலி, ”இறைவனுக்கு நன்றி. எங்களுடைய சிறு முயற்சியின் மூலம் ஒரு மனித உயிர் இறப்பில் இருந்து காக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் நாங்கள் இரண்டு குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். மனிதத்தைக் குறித்து மகிழ வேண்டிய தருணம் இது என்று கூறினார்.