சண்டிகர்:
வழிதவறி எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துவிட்ட பாகிஸ்தான் சிறுவனை அந்நாட்டு அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த கசூர் மாவட்டம், இந்திய எல்லையை ஒட்டி இருக்கிறது. இம்மவட்டத்தின் தாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது தன்வீர். இவர் நேற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வழிதவறி நுழைந்துவிட்டார்.
தோனா தெலு மால் என்ற எல்லைப்புறபகுதி அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், இந்த சிறுவனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், மிகுந்த தாகம் ஏற்பட்டதால், நீரைத்தேடி அலைந்தேன். அப்போது தெரியாமல் இந்திய பகுதிக்குள் நுழைந்துவிட்டேன் என்று அந்த சிறுவன் தெரிவித்தார்.
அவர் கூறியது உண்மை என்பது தெரியவர, அவருக்கு நீர், உணவு கொடுத்து, தங்களது முகாமிலேயே நேற்று இரவு தங்க வைத்தனர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். பிறகு இன்று காலை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். பிறகு, அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ஆனால், கடந்த வாரம் சந்த் பாபுலால் சவான் எனற இந்திய ராணுவ வீரர், வழிதவறி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்துவிட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துவைத்துக்கொண்டு விட மறுக்கிறது.
இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவும்போதும், மனிதாபிமானத்துடன் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நடந்துகொண்டிருக்கும் விதம் நெகிழவைக்கிறது.
Patrikai.com official YouTube Channel