டில்லி:

ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை அனுப்பும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.  இவர்களை கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்ச கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த நிலையில்,  தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உள்ளதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்தி வெளியானது.  மேலும், மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக பேரறிவாளன் மத்திய தகவல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டிருந்தார். தனது கருணை மனு நிராகரிக்கப்பட காரணம் என்ற தகவலை கோரியிருந்தார். இந்த நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை அனுப்ப மத்திய தகவல் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 ஆயுள் குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முன்மொழிவு, அது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவு  தொடர்பான கோப்பு குறிப்புகள் மற்றும் கடிதங்களின் நகல்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு (எம்.எச்.ஏ) உத்தரவிட்டுள்ளது. .

இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையர் சுதிர் பார்கவா, புழல் சிறையில் உள்ள பேரறிவாள னிடம் வீடியோ காண்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோப்புகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களது மரண தண்டனை கடந்த 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையான உச்சநீதி மன்றத்தால் மாற்றப்பட்டது. அவர்கள் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து  தமிழக அரசு அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்தியஅரசுக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது.

ஆனால், அந்த கோப்புகளை மத்தியஅரசு பரிசீலிக்காத நிலையில், அவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்திடம் தகவல் ஆணையம் கோப்புகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.