சென்னை: சைபர் குற்றங்களில் ஈடுபடுவது எப்படி?, அதன் வாயிலாக பண மோசடி செய்வது எப்படி உள்பட பல்வேறு சைபர் கிரைம் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை கர்நாடகாவில் சிலர் பயிற்றுவித்து வருவதாக, கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், அதுதொடர்பான சைபர் குற்றங்களும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு சைபர் கிரைம் வழக்குகள் 122% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2024 இல் சைபர் கிரைம் தொடர்பாக 11,914 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, 2023 இல் வெறும் 5,361 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில். இவற்றில், ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் வெடிக்கும் வகையில் 882.35% அதிகரித்து, இதன் விளைவாக ₹80.57 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில், 2022 ஆம் ஆண்டில் மாநில காவல்துறை பதிவு செய்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2,082 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 4,121 ஆகவும், 2024-ல் 5,385 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுதொடர்பான புகார்களில் வெறும் 3% மட்டுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுவதாகவும் 50%க்கும் அதிகமான புகார்கள், சிஎஸ்ஆர் எனும் அடையாளம் காணாத குற்றத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன. சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது எனும் டிஜிட்டல் அர்ரெஸ்ட் மற்றும் ஆன்லைன் செயலி மோசடிகள் மூலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், சைபர் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தியபோது, அந்த நபர், சைபர் குற்றங்களில் ஈடுபட கர்நாடகாவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதாகதெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக தமிழ்நாட்டிலும், இணையவழியில் பண மோசடி செய்வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தமிழ்நாடு காவல்துறையினர், இந்த குற்றத்தை செய்த, சைபர் குற்றவாளிகளான, கேரள மாநிலத்தை சேர்ந்த அன்வர்ஷா (வயது 27), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜுபர் உல்லாகான் (வயது 23), சல்மான்கான் (வயது 30); கிரீஷ் (வயது 25) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இவர்களிடம் இருந்து, மொபைல் போன் சிம் கார்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட, ‘டிஜிட்டல்’ ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்த போது, இவர்களின் கூட்டாளிகள், பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் பதுங்கி இருப்பதும், அவர்கள், சைபர் குற்றங்கள் தொடர்பாக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சைபர் குற்றவாளியான, பெங்களூருவை சேர்ந்த சல்மான்கான் காவல்துறையில்8 அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்கள் ஊரில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தோர், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் முறையை கற்றுத் தந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சிலரும் பயிற்சி அளித்தனர். அதன்பின், நானும் என் கூட்டாளிகளும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வந்தோம். இதற்காக, எங்கள் மாநிலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கும் மையங்களையும் நடத்தி வந்தோம் என்றவர், எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் செய்யும் சைபர் மோசடி செய்யும் தொகைக்கு ஏற்ப, எங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு சைபர் குற்றங்களை செய்ய பயிற்சி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாங்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில மக்களிடம், அவர்களின் தாய் மொழியில் பேசி பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், 20 வகையான இணையதள மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.