காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்று போடப்பட்டது.

2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகவும் பேசிய சோனியா காந்தியின் வீடியோ ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி, சோனியா காந்திக்கு அருகில் பைபிள் புத்தகம், இயேசு சிலை மற்றும் இந்தியாவை கிருத்தவ நாடாக மாற்றுவது எப்படி ? என்ற பெயரில் ஒரு புத்தகம் இருப்பது போன்று போலியாக இணைத்து பதிவிட்டிருந்தனர்.

மதமாற்றத்திற்கு எதிரானவர்கள் என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கி வரும் @noconversion என்ற பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய பதிவு முதலில் பதிவிடப்பட்டது.

இந்தப் பதிவை தமிழக பா.ஜ.க. செயலாளர் சுமதி வெங்கடேஷ், பா.ஜ.க. ஆதரவாளர் ரேணுகா ஜெயின் உள்ளிட்ட பலர் மீள்பதிவு செய்திருந்தனர், சு.சாமி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இதனை ரீ-ட்வீட் செய்திருந்தனர்.

பதிவில் இணைக்கப்பட்ட புகைப்படம் போலியானது என்று ஆல்ட் நியூஸ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, மீள்பதிவு செய்தவர்கள் தங்கள் பதிவை நீக்கிவிட்டனர்.

கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சர்ச்சையில் பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவின் பதிவை போலி பதிவு என்று ட்விட்டர் நிறுவனம் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து இந்த பதிவுகளை அவர்கள் நீக்கி இருந்தபோதும், இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

https://twitter.com/Satyam737/status/1399655886008709120

நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயல்பட்டு வரும் சமூக வலைதள பக்கங்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள், அவர்களின் பதிவை ஆமோதிப்பது போல் செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.