டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் அல்லாத உலகளாவிய சன்னி இஸ்லாமிய சுவிசேஷ இயக்கமான தப்லிகி ஜமாஅத் அமைப்பானது டெல்லியில் ஒரு மாநாட்டை அண்மையில் நடத்தியது. இந்தியாவில் 1927ம் ஆண்டு முகமது இலியால் அல் காந்தல்வி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்டோரை அடையாளம் காண உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.

அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய குடியுரிமை துறை அதிகாரிகள் மூலம் நிஜாமுதின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியல் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பட்டியலில் இருப்பவர்களில் பலர், மிஷசனரி விசாவில் இந்தியாவுக்கு வரவில்லை. நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற தப்லிகி ஜமாஅத்தின் காஷ்மீர் தலைவர் உட்பட, குறைந்தது 10 பேர், இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 6 பேர் பலியாகி இருக்கின்றனர்.

காஷ்மீரில், இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பட்டியலை போலீசார்  தயாரித்துள்ளனர், மேலும் பொதுமக்கள் முன் வந்து தங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களை அடையாளம் காண நாங்கள் விரைவாக செயல்படுகிறோம் என்று அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி கூறி இருக்கிறார்.

காஷ்மீரில் மட்டும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 37 பேரில், குறைந்தது 18 பேர் நிஜாமுதீன் நிகழ்வில் கலந்து கொண்டனர் அல்லது கலந்து கொண்டவர்களுடன் தொடர்பு கொண்டனர் என்று அவர் கூறினார்.

டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்தும் கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது.

பிப்ரவரியில் மலேசியாவில் ஒரு மசூதியில் 16,000 பேர் இதுபோன்று கூடினர். உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய மிஷனரி இயக்கத்தின் 16,000 பேர் கொண்ட அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸை 6 நாடுகளுக்கு பரப்பி, தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய மையமாக மாற்றி இருக்கின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

4 நாள் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 620 க்கும் மேற்பட்ட மலேசிய நாட்டினருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. புருனேயில் 73, தாய்லாந்தில் 10 பேருக்கும் பாதிப்பு இருக்கிறது என்று தினசரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதே தருணத்தில் அல் அஜிரா ஊடகமானது வேறு ஒரு முக்கிய அம்சத்தை மேற்கோள் காட்டி இருக்கிறது. மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவை மேற்கோள் காட்டி, மலேசிய பங்கேற்பாளர்களில் பாதி பேர் மட்டுமே சோதனைகளுக்கு முன்வந்துள்ளனர் என்று அச்சத்தை எழுப்பியது. பாகிஸ்தானில் இந்த அமைப்பை சேர்ந்தவர்களில் 35 பேரில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.