பணமதிப்பிழப்பு என்ற பொருளாதாரப் பேரழிவு நடவடிக்கையை கடந்த 2016ம் ஆண்டில் நரேந்திர மோடி கொண்டுவந்தபோது, அதுகுறித்து பதிலளிக்குமாறும், விவாதத்தில் பங்கேற்குமாறும் மோடியை வற்புறுத்தி, நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சியினர்.
ஆனால், மோடி தரப்பினரோ எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து சற்றும் கவலைப்படாமல், ஒருவழிப் பாதை முறையில் மக்களிடம் சென்று உணர்ச்சிவசமாக கண்ணீர் வடித்து வசனம் பேசி, அந்த நடவடிக்கை நாட்டின் நன்மைக்காகத்தான் என்று நம்ப வைத்தனர்.
மக்களிடம் தெளிவாக விளக்கி, அவர்களின் கோபத்தை அரசின் மீது திருப்பியிருக்க வேண்டிய எதிர்க்கட்சிகளோ, தங்களின் கடமையை நாடாளுமன்றத்தோடு முடித்துக் கொண்டனர் மற்றும் சிலர் ஊடகங்களைக் கையாண்டாலும் அது பலன்தரும் வகையில் இல்லை.
அப்படித்தான் இப்போதும் நடந்துள்ளது என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். மோடி அரசின் அவலங்களையும் தோல்விகளையும் மக்களிடம் வீரியமிக்க முறையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், அதை சரியாக செய்யத் தவறிவிட்டனர் என்றே குற்றச்சாட்டு எழுகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய பாரதீய ஜனதா, வழக்கம்போல, தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு என்பதை பெரிய விஷயமாக்கி, மற்றவற்றை மறக்கச் செய்து வெற்றிபெற்று விட்டது என்கின்றனர் அவர்கள்.