டெல்லி: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து மத்தியஅரசு விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதனால், பல மண்டலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தைக் காட்டிலும் குஜராத் மாநிலத்திற்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மத்தியஅரசு மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகளை காட்டுகிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. அதில், “ தமிழகத்தில் தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
2021 ஜூன் 2ஆம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 7.24 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் கையிருப்பு உள்ளது.
ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ள தடுப்பூசிகளின் மொத்த டோஸ்களில், . 2021 ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக்ப்படும், அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
18-44 வயதினருக்கான புதிய தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் மாநிலத்துக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் அளவு குறித்தும் தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-44 வயதினருக்கான 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்கீழ், ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.