சென்னை:

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, எத்தனை நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 23 மற்றும் 24ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த  முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது..

இதற்கிடையில்,  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி தனியார் நிறுவனம் சார்பில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.

கடந்த 2015ம் ஆண்டு  நடைபெற்ற  முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? 

எத்தனை தொழில்கள் புதிதாக தொடங்கப்பட்டன? 

2015ல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? 

2015 மற்றும் 2019 ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை?

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.