புதுடெல்லி: இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜுன் மாத காலகட்டத்தில், நாட்டிலுள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 2,480 பண மோசடி நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட தொகையாக கூறப்படுவது ரூ.31,898.63 கோடிகள்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிதான். மொத்த மோசடி அளவில் 38% அளவிற்கான மோசடிகள் இந்த வங்கியில்தான் நடைபெற்றுள்ளன.
மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.12,012.77 கோடிகள் எஸ்பிஐ வங்கியைச் சேர்ந்தது. எஸ்பிஐ வங்கிக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருப்பது அலகாபாத் வங்கி.
இந்த வங்கியில் 381 மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்த தொகையின் அளவு ரூ.2,855.46 கோடிகள். மூன்றாவது இடத்தில் இருப்பது பஞ்சாப் தேசிய வங்கி. இந்த வங்கியில் கண்டறியப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 99 மற்றும் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு ரூ.2,526.55 கோடிகள்.
அதேசமயம், அவை எந்தமாதிரியான மோசடிகள் மற்றும் இதர விபரங்கள் குறித்த எந்த விரிவான தகவல்களும் இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் வழங்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.