புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களில், நாடு முழுவதும் சுமார் 43,600 பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய ஆண்டைவிட 21% அதிகம். ஏனெனில், அதற்கு முந்தைய ஆண்டில் சாலை விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 35,975. மேலும், 2018ம் ஆண்டில் ஹெல்மட் அணியாமல் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்து விபத்தில் சிக்கி மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,360.
இந்த விஷயத்தில் உத்திரப்பிரதேச மாநிலம்தான் முதலிடம் வகிக்கிறது. அங்கே 2018ம் ஆண்டில் ஹெல்மட் இல்லாமல் சென்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,020. இரண்டாமிடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5,232.
தமிழகத்தில், அதேகாலகட்டத்தில் ஹெல்மட் அணியாமல் சென்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,048. குஜராத்தில் கடந்தாண்டில் ஹெல்மட் அணியாமல் சென்று இறந்தோரின் எண்ணிக்கை 958 மற்றும் ஹெல்மட் இல்லாமல் பின்னால் அமர்ந்து சென்று இறந்தோரின் எண்ணிக்கை 560. ஜார்க்கண்ட்டில் இந்த இருதரப்பாரின் இறப்பு எண்ணிக்கை முறையே 790 மற்றும் 450.