புதுடெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், அவர்களில் 255 பேர் ஈரானிலும், 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 5 பேர் இத்தாலியிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியர் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த திங்களன்று ஈரானிலிருந்து 53 இந்தியர்கள் தாயகம் திரும்பியதிலிருந்து, அந்நாட்டிலிருந்து வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 389 என்பதாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில், ஈரான் முக்கிய இடம் வகிப்பதால், அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதில் இந்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஈரானில் கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 1000ஐ நெருங்குகிறது என்றும், 15,000க்கும் மேற்பட்டோர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.