டில்லி

கொரோனா தடுப்பு மருந்தை அனைத்து மக்களுக்கும் விநியோகிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.  பிஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஒப்புதலுக்குத் தயாராக உள்ளது.   இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86 லட்சத்தைத் தாண்டி உள்ளதால் தடுப்பூசிக்கு அவசியத் தேவை உள்ளது.  உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியில் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தனது டிவிட்டரில்,  ”பிஃபைசர் நிறுவனம் நம்பகமான கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகளை வகுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது, எப்படித் தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறது” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.

ராகுலின் இந்த கேள்விக்கு காரணம் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு சேர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பல்வேறு சவால்கள் இருப்பதாகச் சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக ஆசிய நாடுகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் தடுப்பு மருந்தைக் குறிப்பிட்ட குளிர் நிலையில் பாதுகாப்பது கடினம் ஆகும். எனவே முறையான சேமிப்பு மற்றும் போக்குவரத்து முறைகள் திட்டமிடப்பட வேண்டும் என்பதால் பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளது என்பதே ஆகும்.