புதுடெல்லி :
உச்ச நீதிமன்ற நீதியரசர் அருண் மிஸ்ரா இன்று தனது பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார், உச்சநீதிமன்றத்தில் இவரை விட மூத்த நீதிபதிகள் இருந்த போதும், சமீப காலத்தில், சந்தேகத்திற்கிடமின்றி செல்வாக்கு மிக்க நீதிபதியாகவே இவர் விளங்கினார்.
நீதிபதி அருண் மிஸ்ரா இந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவராக எப்படி உயர்ந்தார் என்பதை விளக்கும் கட்டுரையை ‘தி வயர்’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது, அதன் தமிழாக்கம்.
நீதிபதி அருண் மிஸ்ரா அவர்களின் புகழுக்குக் காரணமான வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்ப்பதற்கு முன் அவரின் குடும்பப் பின்னணி பற்றி சிறிது பார்ப்போம்.
1955 செப் 3-ம் தேதி பிறந்த நீதிபதி அருண் மிஸ்ராவின் குடும்பத்தில் பலரும் வழக்கறிஞர்கள். இவரது தந்தை ஹர்கோவிந்த் ஜி மிஸ்ரா மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக 1977 டிசம்பர் முதல் 1982 ஜூலை வரை பணியாற்றினார், ஓய்வுபெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆன சமயத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.
1978 முதல் 1999 வரை கிரிமினல், சிவில், அரசியலமைப்பு, தொழில்துறை மற்றும் சேவை சம்பந்தப்பட்ட வழக்குகளை நடத்திவந்த வழக்கறிஞராகப் பணியாற்றிய நீதிபதி அருண் மிஸ்ரா 1999 அக்டோபர் 25-ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2010-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெரும்வரை அவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 2012 டிசம்பருக்குப் பின் கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் பெற்றவர், பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜூலை 2014-ல் நியமிக்கப்பட்டார், அப்போது மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற இணையதளத்தில் தனது பணிக் குறிப்பு மற்றும் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ள நீதிபதி அருண் மிஸ்ரா, தான் இந்திய பார் கவுன்சில் சேர்மனாக இருந்ததை குறிப்பிட்டதுடன், ஐந்தாண்டு சட்டப்படிப்பு அறிமுடப்படுத்தப்பட்டது, தரமற்ற சட்டக் கல்லூரிகளை மூடியது, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பணிபுரிவது குறித்த சட்ட வரைவை கொண்டுவந்தது, வழங்கறிஞர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்தியது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளார். 1998-ல் தனது 43-வது வயதில் இவர் இந்திய பார் கவுன்சிலின் சேர்மேனாக தேர்ந்துக்கப்பட்ட போது நாட்டிலேயே மிக இளம் வயதில் இந்தப் பதவிக்கு வந்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
சகோதர நீதிபதிகள் தங்கள் சகோதரரையும் நீதிபதியாக வளர்த்தெடுப்பார்கள்
வழக்கறிஞரான இவரது இளைய சகோதரர் விஷால் மிஸ்ரா கடந்தாண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு 45 வயது நிறைவடையும் முன்பே நீதிபதியாக நியமிக்கப்பட்டார், நீதிமன்ற நியமன வழிகாட்டு வரைவின் படி குறைந்தபட்சம் 45 வயது பூர்த்தியானவர்களே நீதிபதியாக தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நியமன வழிகாட்டு வரைவை மீறி உயர்நீதிமன்ற கொலீஜியம் விஷால் மிஸ்ராவை செப்டம்பர் 2018-ல் பரிந்துரைத்தது இதனை உச்சநீதிமன்ற கொலீஜியம் 2019 மே 10-ம் தேதி ஏற்றுக்கொண்டது.
உயர்நீதிமன்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக கூறிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய கொலீஜியம் தனது தீர்மானத்தில் : “விஷால் மிஸ்ராவின் வயது குறித்து உயர்நீதிமன்ற கொலீஜியம் கொடுத்த விளக்கத்தை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்றுக்கொண்டு இவரது பெயரை பரிந்துரைக்கிறது” என்று கூறியிருந்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் என்ன விளக்கமளித்தது என்பது குறித்து இந்த தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரைக்கும் ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒருவராக இருந்த போதும் நீதிபதி விஷால் மிஸ்ரா தேர்வு குறித்த முடிவில் பங்கெடுக்கவில்லை.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் தீர்மானத்தில் “உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்க மத்திய பிரதேச உயர்நீதிமன்ற விவகாரங்களில் அனுபவமுள்ள தங்கள் சக நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா இந்த ஆலோசனையில் இருந்து அவராகவே விலகியிருந்தாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
நீதிபதி விஷால் மிஸ்ரா கட்சி அபிமானமுள்ளவராக இருக்கக்கூடும் என்பது அவரது முகநூல் பக்க இடுகையில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பதிவில், நேருவின் குடும்பம் இஸ்லாமிய பின்னணியைக் கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன் அதனால் தான் நேரு குடும்பம் இந்துக்களை வெறுக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இந்த முகநூல் பக்கத்தில் 2014-க்குப் பின் எந்தப் பதிவும் இடவில்லை.
1974-ம் ஆண்டு ஜூலை 17-ம் நாள் பிறந்த நீதிபதி விஷால் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தனது மூத்த சகோதரர் ஒய்வு பெற்று 16 ஆண்டுகள் கழித்து அதாவது 2036-ல் தான் ஓய்வுபெறுவார். உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வுபெற்றால், 2039-ம் ஆண்டு அதாவது அவரது 65-வது வயதில் தான் ஓய்வுபெறுவார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்னர், 2019 மே 22-ம் தேதி, மத்திய சட்டத்துறை அமைச்சகம் விஷால் மிஸ்ராவை நீதிபதியாக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. வயதில் இளையவராக இருப்பதால், பின்னாளில், இவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவும் அதில் நீண்ட நாட்கள் நீடிக்கவும் பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.
நீதிபதி அருண் மிஸ்ராவும் தனது இளைய சகோதரரைப் போல 45 வயது பூர்த்தியடையும் முன்பே மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், ஆனால் 1999-ல் வயது குறித்து விதிகள் எதுவும் இல்லை என்பதும் அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நீதிபதியாக அருண் மிஸ்ரா அளித்த முக்கிய தீர்ப்புகளும் – வழக்குகளும்
உச்சநீதிமன்ற நீதிபதியாக 2014 ஜூலை 7 முதல் பணியாற்றிய நீதிபதி அருண் மிஸ்ரா, உச்சநீதிமன்றத்தில் இதுவரை 540 அமர்வுகளில் பங்கேற்று 132 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். இவர் தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள் :
-
- 2002 குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக குஜராத் ஐ பி எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் தொடர்ந்த வழக்கு
- சஹாரா மற்றும் பிர்லா நிறுவன ஊழல் டைரி வழக்கு
- நீதிபதி லோயா மரண வழக்கு
- லாலு பிரசாத் யாதாவிற்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு
- குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கு
- மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு
- முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு
- சி.பி.ஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட வழக்கு
- அசோக் கெஹலோட் தலைமையிலான ராஜஸ்தான் அரசின் பெரும்பான்மை நிரூபிக்ககோரிய வழக்கு
உள்ளிட்ட முக்கிய வழக்குகளை நீதிபதி அருண் மிஸ்ரா விசாரித்துள்ளார்.
நீதிபதிகள் லோதா, ஹெச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், ஜெ.எஸ்.க்ஹெகர், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகிய ஏழு பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த போது அவர்களின் கீழ் பணியாற்றியுள்ள நீதிபதி அருண் மிஸ்ராவை, நீதிபதிகள் லோதா, ஹெச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், பி.எஸ்.சவுகான் மற்றும் சி.கே.பிரசாத் ஆகிய ஐந்து பேர் கொண்ட கொலிஜியம் குழு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தது.
நீதிபதி லோதா தலைமை நீதிபதியாக இருக்கும்போது உச்சநீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, 2014 செப்டெம்பரில் நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமை நீதிபதியாக ஆனது முதல் உச்சநீதிமன்றத்தில் செல்வாக்கு பெற்ற நீதிபதியாக உயரத்தொடங்கினார்.