டில்லி
உலகமே கொரோனாவால் தத்தளித்தபோது அதானிக்கு எப்படி லாபம் கிடைத்தது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார்.
கொரோனா அச்சுறுதல் காரணமாக உலகெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சர்வதேச அளவில் அனைத்து வர்த்தகங்களும் முடங்கிப் போயின. உலகில் ஏராளமான நிறுவனங்கள் லாபம் இழந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கின. பங்குகள் சரிவால் பல செல்வந்தர்களின் சொத்து மதிப்பு குறைந்தது.
இந்நிலையும் புளூம்பெர்க் வெளியிட்ட தகவலின் படி சென்ற 2020 ஆம் வருடம் மட்டும் பிரபல இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி ரூ.12 லட்சம் கோடி லாபம் அடைந்தது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி காற்றாலை மின் உற்பத்தி, துறைமுகம், விமான நிலைய நிர்வகிப்பு என பல தொழில்கள் செய்து வருகிறார்.
இவர் சென்ற வருடம் உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடங்களில் உள்ள அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் ஆகியோரை விட அதிக வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதானியின் குழும நிறுவனப் பங்குகள் உயர்ந்ததே ஆகும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 2020 ஆம் ஆண்டில் அனைத்து மக்களின் சொத்து மதிப்பு உயர்வு 0% ஆக இருந்தது. ஆனால் அதே கால கட்டத்தில் அதானி மட்டும் எவ்வாறு ரூ.12 லட்சம் கோடி லாபம் ஈட்டி சொத்து மதிப்பை உயர்த்தினார்? உலகெங்கும் பங்குகள் வீழ்ச்சி அடைந்த போது அதானியால் இது எவ்வாறு முடிந்தது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.