டில்லி
வீடு கட்டுமானங்களுக்கு குறைக்கப்பட்டுள்ள ஜி எஸ் டி வரி விகிதம் ஏற்கனவே கட்டப்பட்டுவரும் வீடு வாங்க உள்ளோருக்கு செல்லுபடி ஆவதில் சிரமம் உள்ளது.
இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று கட்டுமானங்களுக்கான ஜி எஸ் டி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டப்படும் அனைத்து புது கட்டுமானங்களுக்கும் ஜி எஸ் டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. இது வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
சாதாரன குடியிருப்புக்களுக்கு இந்த வரி விகிதம் உள்ளீட்டு ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறும் வசதியுடன் 12% ஆக இருந்தது. அந்த வரி விகிதம் உள்ளீட்டு வரி திரும்பப் பெறும் வசதி இல்லாமல் 5% ஆக குறைக்கப்பட்டது. மலிவு விலை வீடுகளுக்கு அந்த வரி விகிதம் உள்ளீட்டு ஜிஎஸ்டி திரும்பப் பெறும் வசதியுடன் 8% ஆக இருந்தது. தற்போது அது உள்ளீட்டு ஜிஎஸ்டி திரும்ப பெறும் வசதி இல்லாமல் 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்களுக்கு இந்த வரி விகிதம் குறித்து ஒரு விதி கூறப்பட்டுள்ளது. இந்த முறைப்படி ஏற்கனவே கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சாதாரண குடியிருப்பு கட்டுமானம் அமைப்போர் தங்கள் வரி விகிதங்களை உள்ளீட்டு ஜிஎஸ்டி வசதியை திரும்பப் பெறும் வசதியுடன் 12% அல்லது ஜிஎஸ்டி திரும்பப் பெறாமல் 5% என்பதில் ஒன்றை அவர்களே தேர்வு செய்துக் கொள்ளலாம்.
அதைப் போல் மலிவு விலை வீடுகள் அமைப்போரும் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு பழைய முறைப்படி உள்ளீட்டு ஜிஎஸ்டி திரும்பப் பெறும் வசதியுடன் 8% அல்லது ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை திரும்பப் பெறாமல் 1% என்னும் இரண்டில் ஒன்றை அவர்களே தேர்வு செய்யலாம் என விதி உள்ளது.
இதில் நாம் ஒன்றை தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கான ஜி எஸ் டி சென்ற மாதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்களுக்கான பொருட்கள் பழைய ஜிஎஸ்டி விகிதத்தில் வாங்கப்பட்டிருக்கும்.
அதனால் கட்டுமானம் அமைப்போர் புதிய ஜிஎஸ்டி விகிதத்துக்கு மாறினால் அவர்களால் தாங்கள் செலுத்திய ஜிஎஸ்டியை திரும்ப பெற முடியாது. எனவே அவர்கள் புதிய வரி முறைக்கு மாறுவார்களா என்பது சந்தேகம். இந்த வரி குறைப்பு என்பது இனி கட்டப்படும் குடியிருப்புக்களை வாங்குவோருக்கு மட்ட்டுமே செல்லுபடி ஆகும்.
ஏற்கனவே கட்டப்பட்டு வரும் குடியிருப்புக்களை வாங்கியோருக்கு கட்டுமான அமைப்பாளர் தேர்வுப்படி ஜிஎஸ்டி அமையும். கட்டுமான அமைப்பாளர்களில் பலர் தனக்கு வரவேண்டிய ஜிஎஸ்டியை விட்டுக் கொடுத்து அந்த லாபத்தை வாங்குவோருக்கு அளிக்க தயாராவார்களா என்பது சந்தேகமே. ஆகவே ஜிஎஸ்டி குறைவு என்பது ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள குடியிருப்புக்களுக்கு செல்லுபடி ஆகாமல் போக அதிக அளவில் வாய்ப்புள்ளது.