சென்னை:

ரவு 10 மணிக்குள் உணவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 23ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் ஆணையருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தான்,  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, கடந்தாண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைப்படி 365 நாட்களும் ஹோட்டல்கள் திறந்திருக்கலாம் எனவும், ஹோட்டல்கள் மூட வேண்டிய நேரத்தை காவல்துறையினர் தீர்மானிக்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,இரவு பத்து மணிக்கு மேல், தான் உணவக விடுதிக்கு சாப்பிட சென்றபோது,  தனக்கு உணவு வழங்க ஊழியர்கள் மறுத்ததாகவும், காவல்துறையினர் உத்தரவு காரணமாகவே விடுதி மூடப்படுவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் இரவு நேர பணிகளுக்கு செல்பவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாகவும்,  இரவு பத்து மணிக்குள்ளாக கடைகளை மூட வேண்டும் என மிரட்டப்படுவது, கடைகள் மற்றும் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,   இது தொடர்பாக மார்ச் 23 ஆம் தேதிக்குள் மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.