ஸ்டாண்ட்-அப் காமெடியன் நடிகர் குணால் கம்ரா மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று விமர்சித்தார்.

இந்த விவகாரம் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையின் கர் பகுதியில் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலை ஷிண்டே தலைமையிலான சிவசேனா தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

ஷிண்டே குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குணால் கம்ரா மீது சிவசேனா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மற்றும் ஷிண்டேவை குறிவைத்து அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுவது உட்பட கம்ரா செய்த செயல்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) விதிகளின் கீழ் புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் ஆகும்” என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன், குணால் கம்ரா, சிவசேனா (யுபிடி) தலைவர்கள் சஞ்சய் ராவத் மற்றும் ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் கைகோர்த்துள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.