சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி செய்து தரப்படும் என தமிழ்நாடு அமைச்சர்  கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானியகோரிக்கை கூட்டத்தொடர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று முற்பகல் உயர்கல்வி, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த் துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. பிற்பகலில், நீதி நிர்வாகம், சிறைகள் சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளத.

இந்த நிலையில்,  இன்று மானிய கோரிக்கை மீது பேசிய அமைச்சர் ஜீதா ஜீவன்,  சென்னை, மதுரை, கோவையில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் இந்தாண்டு கட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்,  “இந்தாண்டு சென்னையில் புதிதாக ஒரு பணிபுரியும் மகளிருக்கான விடுதி அரசால் கட்டப்பட உள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேர்வு செய்து கொடுத்தால், அந்த பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதியை அரசு கட்டித்தரும்.  இவைகள், இணைய வசதி , பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது.

மாத வாடகையில் தங்குவோர் மட்டுமின்றி, பிற இடங்களுக்கு போட்டித் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஓரிரு நாட்கள் வாடகைக்கு அங்கு தங்க முடியும். மேலும், சென்னை, மதுரை, கோவையில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் இந்த ஆண்டு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.