அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த கோட்டிகலபுடி கிருஷ்ண கிஷோர் (45) மற்றும் அவரது மனைவி ஆஷா (40). இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொள்ளு நகரைச் சேர்ந்தவர்கள்.

கிருஷ்ண கிஷோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். 10 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் பாலக்கொள்ளு வந்த கிஷோர் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் சென்று, மீண்டும் அமெரிக்கா திரும்பிய நிலையிலேயே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. குடிபோதையில் எதிர்திசையில் வந்த ஒரு வாகனம் இவர்களின் காரை பலத்த வேகத்தில் மோதி உள்ளது. இதில் லாரி ஒன்று தொடர்புடையதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், கிருஷ்ண கிஷோர் மற்றும் ஆஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தம்பதியின் ஒரு மகன், ஒரு மகள் ஆகிய இருவரும் காரில் இருந்தனர். அவர்கள் கடுமையாக காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தம்பதியின் உடல்கள் மேரிலாந்து மாநில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்ட பிறகு, அடுத்த கட்ட ஏற்பாடுகள் குடும்பத்தினர் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்த திடீர் மரணம், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள தெலுங்கு அமைப்புகள் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்த சம்பவம், அமெரிக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் எதிர்திசை பயணம் போன்ற ஆபத்தான பழக்கங்கள் எவ்வளவு உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
[youtube-feed feed=1]