டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி குரல் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன், இந்திய மக்களின் குரலாக கடந்த முறையை காட்டிலும் கூடுதல் பலத்துடன் எதிர்க்கட்சிகளி குரல்கள் ஒலிக்கும் என எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார். இதற்கிடையில் கடந்த இரு நாட்களாக எம்.பி.க்கள் பதவி ஏற்பு நடைபெற்றது. தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெற்று, ஓம்பிர்லா மீண்டும் 2வது முறையாக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பொதுவாக தேர்தல் நடத்தப்படாமல் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை அது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்துஏற்படவில்லை இதையடுத்து, துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால் சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன. ஆனால், அதை பாஜக ஏற்க முன்வராத நிலையில், இந்த முறை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் களத்தில் குதித்தது. இதில் பாஜக வெற்றிபெற்றது. தனால் 48 ஆண்டுகளில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் குரல் வாக்கெடுப்பு மூலமாக பா.ஜ.க வேட்பாளர் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.பின்னர் சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓம் பிர்லாவை பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.
பின்னர் அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”இந்த அவை நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது. சபாநாயகர்தான் அந்த குரல்களின் இறுதி நடுவர். இந்திய மக்களின் குரலாக கடந்த முறையை காட்டிலும் கூடுதல் பலத்துடன் எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிக்கும்.” என தெரிவித்துள்ளார்.