ஹாங்காங்
ஹாங்காங் மருத்துவ நிபுணர் கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து உருவாக்கிய போதிலும் ஆய்வு இன்னும் முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் சுமார் 132 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 6000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உலகெங்கும் இந்த வைரஸ் பரவும் அச்சுறுத்தல் உள்ளதால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப தடுப்பு மருந்து குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஹாங்காங் பல்கலைக்கழக பேராசிரியர் யூன் குவோக் யுங் என்பவர் தாம் இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளதாக தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்குத் தகவல் தெரிவித்துள்ளார், அவர் இது குறித்து,”நாங்கள் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தடுப்பு மருந்த உருவாக்கியுள்ளோம். ஆனால் இந்த தடுப்பு மருந்தை இது வரை விலங்குகளிடம் சோதனை செய்யும் பணி மட்டுமே தொடங்கி உள்ளது.
இந்த தடுப்பு மருந்து இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து தயாரிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை தற்போது விலங்குகளிடம் சோதித்து வருகிறோம். இந்த சோதனிஅ முடிய சில மாதங்களாகும். விலங்குகளிடம் நடைபெறும் சோதனை வெற்றி பெற்ற பிறகு மனிதர்களிடம் சோதனை நடத்தி அதன் பிறகே முடிவு தெரிய வரும். மனிதர்களிடம் இந்த சோதனை நடத்த இன்னும் குறைந்தது ஒரு வருடம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.