ஹாங்காங் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளதாகவும், இன்னும் 280 பேரை தேடும் பணி நடைபெற்று வருவ தாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு  நாடுகளில் ஒன்று  ஹாங்காங். இந்நாட்டில் உள்ள  தை போ மாகாணத்தில் ‘வாங் புக் கோர்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, தலா 35 மாடிகளுடன் வரிசையாக எட்டு கட்டடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 2,000 வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள்  புதுப்பிக்கப்பட்டு வந்தன.

இந்த குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் மற்றும் வலைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு கட்டடத்தில் இருந்த மூங்கில் சாரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த கட்டடங்களுக்கும் தீ மளமளவென பரவியது. ஏழு கட்டடங்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், அந்தப்பகுதியே சிவப்பு நிறமாக காட்சியளித்ததுடன் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து 128 தீயணைப்பு வாகனங்களில், 767 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

 சில கட்டிடங்களின் கீழ் மட்டங்களில் தேடத் தொடங்கினர். இருபத்தி ஆறு மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் 900 க்கும் மேற்பட்டோர் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில், தீயணைப்பு படை வீரர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என தெரியவந்துள்ளது. மேலும் 280 பேர் காணாமல் போயுள்ளனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 52 முதல் 68 வயதுக்குட்பட்ட மூன்று பேர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.