சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 20ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன்,  தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 20ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.