புதுடெல்லி: மதம் சார்ந்த விழாக்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் அதிக அளவில் மத விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் ஊரடங்கையொட்டி, கிறிஸ்துவர்கள், தேவாலயங்களுக்குச் செல்லாமல் வீட்டியே புனித வெள்ளி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் நாட்களில், பைசாகி, ரங்கோலி பிஹூ, விஷூ, பொய்லா பொய்ஷாக் விழாக்கள் வரவுள்ளன. வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. மேலும் அடுத்தடுத்து, மஹா விஷூபா, சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளும் வரவுள்ளன.
எனவே இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வரும் நாட்களில் பல மத விழாக்கள் வர உள்ளன. இதையொட்டி, மக்கள் ஒன்று கூடுவதையும், பேரணியாக செல்வதையும் அனுமதிக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
இதுவரையிலான ஊரடங்கு காலத்தில், விவசாய பணிகளுக்கும், அதுதொடர்பான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டப் பயிர், பெட்ரோல் பங்கு, தேயிலை தொழில், வாகன பழுது பார்ப்பு துறைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.