டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்தியஅரசு, தேர்தல் நடைபெற இருக்கும் பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து ஏராளமான தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30ந்தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், அக்டோபர் 15ம் தேதி வரை எந்தவொரு மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்திலும் அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடருவதாக அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது கடந்த 30ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், தேர்தல் கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளது.
பீகார் உள்பட 12 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என்றும், அதேசமயம் கோவிட்-19 பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, பீகார், தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆகிய 12 மாநிலங்களில்அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டள்ளது.