மாஸ்கோ

    ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.

        உலகம் முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத்  தாண்டியுள்ள நிலையில் ஒரேநாளில் 3000 மக்கள் பலியாகி உள்ளனர். எனவே  உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொதுவிடங்களில் கூடுவதற்கு தடை விதித்துள்ளது.

      இந்நிலையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பலருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், பணிபுரிவோருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

     ஆனால் விடுமுறை  கிடைத்தவுடன் ரஷ்ய மக்கள் பலரும் உல்லாச பயணம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். அதனால் நாட்டின் பல சொகுசு விடுதிகள் முன்பதிவுகளால்  நிரம்பி வழிந்தது.

      இதனை கவனத்தில் கொண்டு வந்த அரசு “விடுமுறை அளித்தது வீட்டிலேயே ஓய்வெடுக்கத்  தான். உல்லாசப் பயணம் செல்வதற்கல்ல” எனக்கூறி மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

       மேலும் அதிபர் புதின் சொகுசு விடுதிகளை மூடுவது குறித்து சிந்தித்து வருகிறார்.