வரும் மே மாதம் 16ஆம் தேதி, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை விடப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
கே.ஞானதேசிகன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 16-ந்தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. மாற்றுமுறை ஆவணச் சட்டப்பிரிவு 25-ன்படி, தேர்தல் நடக்கும் தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும். அதன்படி, சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மே 16-ந்தேதியை (திங்கட்கிழமை) பொது விடுமுறை நாளாக தமிழக கவர்னர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.